கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர், அலங்கிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். எறையூரில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட அவர், குழந்தைகளுடன் கோலாட்டம் ஆடி மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார். பின்னர், வேட்பாளர் குமரகுருவுடன் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.
தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் இருந்து பொதுமக்களை முகாமுகமாக சந்தித்து பேசிய வைகைச் செல்வன், அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கினார். “குமரகுரு வெற்றி பெற்றால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழலில் அவர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்,” என்றார்.
மேலும், “இந்தத் தேர்தலில் திமுக அரசை மாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுகவை வெற்றிப் பெறச் செய்யுங்கள். வருகிற 23ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள். குமரகுருவை குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என வைகைச் செல்வன் வலியுறுத்தினார்.
இந்த பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment